Tuesday, May 25, 2004

கவிதை - இருள் கவ்வும் நேரம்

கானகம் அமைதியாயிருக்கிறது.
மான்கள் துள்ளி விளையாடத்
துவங்கிவிட்டன.
நிலப்பரப்பெங்கும் காணப்பட்ட
எலும்பு புதையல்கள்
இப்போதில்லை.
மரண ஓலமும் இப்போது
கேட்கவேயில்லை.

பருத்த மரங்களின்
பரந்த கிளைகளில்
வானம்பாடிகள்!
தெளிந்த நீர்நிலைகளில்
தெரியாமல் அலையும்
நீர்ப்பூச்சிகள்!

கானகம் இவ்வளவு
இயல்பாய் இருக்குமா என்ன?

இப்போதுதான் தெரிகிறது
பேரழகும், பேரமைதியும்!

மான்கள் மட்டுமல்ல பூனைகளும்
மகிழ்ச்சிக் களியாட்டத்தில்!

அமைதிப்பூங்கா ஒரு
அர்த்த சாமத்தில்
சிதைந்து போனது.

வானமே அதிரும் வண்ணம்
ஓசையும் வந்தது
கிழக்குப் பக்கமிருந்து!

கானகமெங்கும் ரத்தவாடை
மீண்டும்
நாசிகளைத் தாக்குகிறது.

துள்ளி விளையாடும் அந்த
மான்களுக்கு தெரிந்திருக்குமா?

சிங்கத்தின் வரவு மீண்டும்
இருக்குமென்று?

- ருத்ரன்