Friday, August 27, 2004

கானல் நீரா? கண்ணீரா?

இருபுறமும் வளர்ந்திருக்கும், கோரைகளையும் வளைந்திருக்கும் நாணல்களையும் தாலாட்டிக்கொண்டே புது வேகம் கொண்டு பிரவாகம் எடுக்கும் நதி. தன் சங்கமத்தை காணப்போகும் ஆவலில் அது எழுப்பும் ஓசை இனிமையான சங்கீதம். உடன் பிறந்த சகோதரனை பார்ப்பது போன்ற மகிழ்ச்சியில் து}ரத்திலிருந்து கையசைக்கும் நெற்ப்பயிர்கள்.

கரைகளின் இருபக்கங்களிலுமுள்ள படிக்கட்டுகளை தாண்டும் வகையில் உயரே எழும்பும் நீர் அலைகள். மகிழ்வாய், ஜாக்கிரதை உணர்வுடன் குளிக்கும் பெரியவர்கள். படிகளில் கால்வைக்கும் குழந்தைகளை கரைக்கு விரட்டும் பெண்கள்; பாலத்தின் மேலிருந்து கரணம் அடித்து நீரினுள் பாயும் இளம் காளைகள். அவர்கள் தண்ணீரில் குதிக்கும் அழகை கண்டும் காணாதது போல் அவர்களை கள்ளத்தனமாய் ரசிக்கும் கன்னிப்பெண்கள் ...

இது ஒரு சிறு கதையின் துவக்கம் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவீர்கள். பின் மேலே சொன்னவை அனைத்தும் கனவுகள் நிறைந்த கற்பனையா என்றால், அதுதான் இல்லை. அவை அனைத்தும் துளியும் கலப்படமில்லாத 100 சதவீத உண்மைச்சம்பவங்கள். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்ததா என்றால் அதுவும் இல்லை.சோழவள நாட்டில் சீரும் சிறப்பாக ஓடிய காவிரியாற்றின் கரையில் நடந்தவைதான் அவையனைத்தும்.

மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் காவிரியாற்றோடு நெருங்கிய பரிச்சயமுள்ளவன் என்ற முறையில் நான் கண்டவைதான் இவை. துவக்கப்பள்ளி காலத்திருந்தே காவிரியின் அழகை அணு அணுவாய் ரசித்தவன் நான். இருபது வருடங்களுக்கு முன்னால் அது கரைபுரண்டோடும் அழகை பார்த்து மெய் மறந்து நின்று, அப்பா அடித்த பின்னர் கரையேறியது இன்னும் மறக்க முடியவில்லை. அதுவும் அணை திறந்த பின்னர் புது வெள்ளமாய் பாய்ந்து வரும் காவிரி தான் எத்தனை அழகு? வரும் வழியில் எதிர்படும், சிறுமரங்கள், செடி கொடிகள் வண்ணமலர்கள், சில நேரங்களில் இறந்து போன கால்நடைகள், பிற உயிரினங்கள் என வெள்ளத்தில் அடித்துச்செல்வதைக் காணும் போது, வாழ்வியல் உண்மைகளை அது உரைத்துச் செல்வதாகத்தான் எனக்கு பட்டிருக்கிறது.

பள்ளி நாட்களின் கோடைவிடுமுறையில் மாலைப்பொழுதுகள் தற்காலிகமாய் வறண்டு போயிருக்கும் காவிரி கரையில் தான் இன்பமாக கழியும். உறவினர் வீட்டு சிறுவர்களுடன் விளையாட்டுகள், விடுகதைகள், கதைகள் என சுவாரஸ்யமான சம்பவங்கள் அங்குதான் அரங்கேறும். மெல்ல, மெல்ல இருள் கவ்வ தொடங்குகையில் எச்சரிக்கை குரல் எழுப்பி வீட்டிற்கு அழைக்கும் பெரியப்பாவின் குரல் கேட்டதும் நிமிடத்தில் குது}கலம் கரைந்துபோகும். எத்தனை நாட்கள் ஏக்கத்துடன் திரும்பி திரும்பி காவிரியை பார்த்துக்கொண்டு பெரியப்பாவின் ஆதரவு கரம் பிடித்து நடந்து வந்திருக்கிறேன்.

ஆடிப்பதினெட்டு வந்தால் பூப்பெய்திய கன்னிப்பெண்ணைப்போல் துள்ளலுடன் காவிரி கடந்து போவதை பார்ப்பதே அழகு. கரையின் இருபுறமும் சிறுவர்கள் சப்பரதட்டி செய்து வண்ணக்காகிதங்கள் ஒட்டி இழுத்துச்செல்வார்கள். குமரிப்பெண்கள் அதிகாலையில் நீராடி மஞ்சள் கயிறு அனிந்து கொள்வர். பச்சரிசியும் வெல்லமும் அனைவருக்கும் விநியோகிக்கப்படும்

ஐப்பசி மாதத்தில் கடைமுகத்தின் போது மயிலாடுதுறையில் துலாக்கட்டம்,திருவிழா களை கட்டியிருக்கும், துலா உற்சவத்தை காணபதற்காகவே ஊரிலிருந்து வந்திருக்கும் உறவினர் கூட்டம்.
கும்மாளமும் குதுகலமுமாய் கரைந்த நாட்கள். மகாதான தெருவை அடைத்து ஆக்கிரமித்திருக்கும் முழுக்கு கடைகள். அவைகளிடையே பொருட்கள் வாங்குவதற்காக அலைமோதும் கூட்டத்தில், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் முன்னேற முடியும் இப்போதைய மாம்பலம் ரெங்கநாதன் தெருவை விட அதிக சன நெரிசலில் மகாதான தெரு இருமாதங்களுக்கு திளைத்திருக்கும்.

இன்றைக்கு ? எதுவும் இல்லை.

ஏனெனில் எல்லாவற்றிற்கும் சப்தநாடியான காவிரி உயிர் நாடி ஒடுங்கி போய் காட்சியளிப்பதுதான். காவிரியில் முழங்கால் அளவேனும் தண்ணீரை பார்த்தே பல வருடங்களாகி விட்டன. வெறுமையாய் காத்திருக்கும் மணற்;பரப்புதான் நம்மை வரவேற்கிறது . நடுவே பரவியுள்ள புதர்கள், காடுகளாய் மண்டியிருக்கும் செடி கொடிகள், என பரிதாபமாய் காட்சி தருகிறது காவிரி.

இங்கு காவிரி மட்டும் வற்றவில்லை. அதனையே நம்பியிருந்த கோடிக்கணக்கான வேளாண் குடும்பங்களின் வாழ்க்கையும் தான். வெகு இலகுவாக கிடைத்து வந்த நல்ல தண்ணீர் பல அடிகளுக்கு கீழே இறங்கி விட்டது. காவிரிப் படுகையில் இப்படியொரு அவலம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.

பயிர்களை விதைக்க வேண்டிய விவசாய சகோதரர்கள் வேதனையை விதைத்து துன்பத்தை அறுவடை செய்கிறார்கள். பசுமையாக காட்சியளித்த தஞ்சை கிராமங்கள் வறண்டு வறட்சியின் சுவடுகளாய் காட்சியளிக்கின்றன.
குலத்தொழிலாய் செய்து வந்த வேளாண் தொழிலை விடுத்து பலர் கூலித் தொழில்களுக்கு மாறிவிட்டனர். வேறு மாவட்டங்களிலிருந்து விவசாய கூலிகலாக மக்கள் இங்கு வந்த காலம் போய், டெல்டா விவசாயிகள் வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் அவல நிலையும் தொடர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக உழவர் திருநாள் தஞ்சை மண்டலத்தில் கொண்டாடப்படவிலலை. இலவச சாப்பாடு வழங்கும் திட்டம் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட போதும் அதில் பயனடைவதை தன் மானத்திற்கு இழுக்கு என்று கருதியவன் தஞ்சை விவசாயி. அரசியல்வாதிகளின் கண்ணாமுச்சி நாடகத்தால் தன் வயிறு சுருங்கி நிற்கிறது வேளாண் குடும்பங்கள்.

கர்நாடக மாநில அரசோ உபரி தண்ணீரை திறந்து விடுவதற்கே கூட பல முறை யோசிக்கிறது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் மட்டுமே கபினி அணை திறக்கப்படுகிறது. கர்நாடக மாநில விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவைதான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நடுவர் மன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு தண்ணீர் திறந்து விட மனமில்லை என்றாலும் அதில் மிகக்குறைந்த அளவையாவது திறந்து விட்டால் ஓரளவுக்கு நிலையை சமாளிக்கலாம்.

நிலைமை இவ்வாறிருக்க தமிழ் மாநில ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் எழுப்பும் வீண் பிரச்சனைகளால் கர்நாடகம் கொதித்துப் போகிறது. மொழி வாரியான பிளவை ஏற்படுத்த இரு தரப்பிலும் சிலர் செய்யும் சதி வேலைகளால் பிரச்சனை தகிக்கவே செய்கிறது. இந்நிலையில் கர்நாடக விவசாயிகளின் ஒத்துழைப்பின்றி காவிரியில் நாம் நீர் பெறுவது என்பது இயலாத ஒன்று. அது நம் துர் அதிர்ஷ்டமானாலும் கூட. ஆனால் அதுதான் உண்மை.

எனவே, இரு மாநில விவசாயிகளின் சுமுகமான பேச்சுவார்த்தையின் முலமாகவே இப்பிரச்சனைக்கு உரிய தீhவு காண முடியும். காவிரிக்காக பாடுபடுவேன் என்று முழங்கும் அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு எவ்வகையிலும் தீர்வு கிடைத்து விடக்கூடாது என்பதில் மும்முரமாக உள்ளனர். இதை விடுத்தால் ஓட்டு வங்கி பாதிப்படையும் என்ற கவலை அவர்களுக்கு. அவர்கள் இப்பிரச்சனையில் ஒதுங்கியிருந்தாலே பாதியளவில் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

“நாற்காலியில் அமரத்துடிக்கும் நடிகர்களாகட்டும்; நாற்காலியில் அமர்ந்து நடிப்பவர்களாகட்டும் காவிரியின் துயரத்தை நேரில் வந்து காணுங்கள். விவசாயிகளின் அவலங்களைக் காணுங்கள். அவர்களின் வாழ்நிலையை உணருங்கள். அதை விடுத்து உங்கள் சுய நலங்களுக்கு இப்பிரச்சனையை எழுப்பி சுய லாபம் தேட முனையாதீர்கள்;. குளிர் சாதன அறையினுள் அமர்ந்து கொண்டு காகித அறிக்கைகள் விடுப்பதை விட்டு வெளியே வாருங்கள்.

காவிரியோடு வாழுங்கள். காவிரியை சுவாசியுங்கள். அதன் வேதனையை அப்போதுதான் உங்களால் உணர முடியும்” என்று வேதனையுறுகிறான் கடைமடை விவசாயி.

ஏதேனும் செய்தே ஆக வேண்டிய காலகட்டம் இது. இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு காவிரியின் சுவடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மணற்பரப்புகள் கூட மறைந்து போய் கான்கீட் காடுகள்தான் காட்சியளிக்கும்.

பல குடும்பங்களுக்கு தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்து உயிரளித்த காவிரி இன்று தன் ஊற்றுக்கண்கள் அடைபட்டு உயிர் தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள். சீக்கிரம் யாரிடமாவது சொல்லுங்கள். ஏதாகிலும் செய்யச் சொல்லுங்கள்.

தியாகன்
மயிலாடுதுறை raj_thia2001@yahoo.com